புதுடெல்லி: மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ராகவ் சதாவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக அவர் மற்றும் கட்சி தலைமையினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவரும் நிலையில், பஞ்சாப் அரசு வழங்கியிருந்த Z பிளஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. மாநில காவல்துறை சார்பில் வழங்கப்பட்டிருந்த இந்த உயர்மட்ட பாதுகாப்பு, சமீபத்திய பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு நீக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் ராகவ் சதாவிற்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த பாதுகாப்பு டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலுக்கு வரும் வரை உடனடி பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ராகவ் சதா பாஜகவிற்கு எதிராக பேசவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதத்தின் தொடக்கத்தில் அவர் வகித்து வந்த மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.
