புதுடெல்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், வளைகுடா நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்தது. கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அப்பகுதிகளில் இருந்த இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் இணை செயலாளர் அசீம் மகாஜன் கூறுகையில், கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 9.84 லட்சம் இந்தியர்கள் பாதுகாப்பாக நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இது சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் அரசுகளின் வழிகாட்டுதல்கள், விமான சேவைகள் மற்றும் பயண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பயணிகளுக்கு தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
வளைகுடா மற்றும் மேற்காசியா முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள் அவசரகால நடவடிக்கையாக 24 மணி நேரமும் செயல்பட்டு, நெருக்கடியை சமாளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
