தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ஆ. ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் உள்ள கோடலம்மன், செல்லியம்மன், ஈஸ்வரன், பெருமாள்சாமி, திருமலைத்தேவர், எல்லம்மன் மற்றும் கரக சுவாமி கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாமல், தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அங்கு சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் வாடகை வசூல் நடைபெறுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹிந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் அளித்த புகார்களை பரிசீலித்து, கோவில் சொத்துக்களை மீட்பதற்கான உரிய நடவடிக்கைகளை 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
