புதுடெல்லி: அரியானா மாநிலத்தில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
அரியானா மாநிலம் ஷிகோப்பூரில், ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடமிருந்து 2008ஆம் ஆண்டு, ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இந்த பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுஷாந்த் சங்கோத்ரா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேரும் அடுத்த மாதம் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் விடுக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கனவே முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
