பார்லிமென்டில் மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு அரசு போதுமான நேரம் ஒதுக்கி வருவதாகவும், அவையை விட்டு வெளியேறிய பிறகு விவாதிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறக்கூடாது என்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்த சில அரசியல் கட்சிகள் இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகளை காரணமாகக் காட்டி பார்லிமென்ட் நடவடிக்கைகளை முடக்குவதாக குற்றம்சாட்டினார்.
மசோதாக்கள் குறித்து விவாதிக்க அரசு போதுமான நேரம் ஒதுக்கினாலும், அதில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை என்றும் அவர் கூறினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அதற்கு உறுதியான ஆதாரம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டை நிர்வகிக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றுவது அரசின் முக்கிய பொறுப்பு என்றும், அவையில் தொடர்ந்து அமளி ஏற்படுத்தி சட்டப்பணிகளை தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மசோதாக்கள் மீது விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால் அவையை விட்டு வெளியேறிய பிறகு “விவாதத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை” அல்லது “விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன” என்று எதிர்க்கட்சிகள் கூறுவது சரியல்ல என்றும் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார்.
