பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், சுத்தமான எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ஆண்டி பர்ன்ஹம் உடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலுக்கு பிறகு, தனது சமூக வலைதள பதிவில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அந்த பதிவில், பிரதமர் ஆண்டி பர்ன்ஹம் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது ஆட்சிக்காலம் வெற்றிகரமாக அமையவும் வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி, கல்வி, மக்கள்-மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இந்தியா – பிரிட்டன் உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமலுக்கு வந்த இந்தியா – பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் மூலம் உருவாகும் முதலீட்டு வாய்ப்புகளை இரு நாடுகளின் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக முழுமையாக பயன்படுத்த இணைந்து செயல்படவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
