மும்பை: மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தின் பரத்வாடா பகுதியில், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி சுரண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகமது அயாஸ் என்ற நபர், வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் நெருக்கம் ஏற்படுத்தி, அவர்களை தனியாக சந்திக்க அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், அவர்களுடன் தொடர்புடைய வீடியோக்களை பதிவு செய்து, அவற்றை பயன்படுத்தி மிரட்டியதாகவும், சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் அனில் போண்டே புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி முகமது அயாஸை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, சுமார் 180 பேருடன் தொடர்புடைய 350-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோக்கள் யாருக்கெல்லாம் பகிரப்பட்டுள்ளன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரின் வீட்டில் சட்டவிரோத கட்டிடம் இருப்பதாக கூறி, அதன் ஒரு பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
