புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசு தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ள நிலையில், அதனை சார்ந்த 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்த சட்டத்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த நடவடிக்கை அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த மசோதாக்கள் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இதுகுறித்து முன்பே உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி கிரிராஜ் சிங், மகளிர் இடஒதுக்கீடு மசோதா அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.
மேலும், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்காதவர்களை விமர்சித்த அவர், தொகுதி மறுவரையறை மசோதாவில் எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டப்படாது என உறுதியாக கூறினார்.
