புதுடெல்லி: 3 நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னர் அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய மந்திரி ராம் நாத் தாக்கூர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பீகார், அசாம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், மராட்டியம், ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 உறுப்பினர்களுக்கு, இந்திய துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று பதவியேற்ற 16 பேரில் 8 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், 3 பேர் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பா.ஜ.க. தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிதின் நபின், தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுள்ளார். அவருடன் மத்திய மந்திரி ராம் நாத் தாக்கூரும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.
மேலும், பீகாரில் இருந்து உபேந்திர குஷ்வாஹா (ஆர்.எல்.எம்.), சிவேஷ் குமார் (பா.ஜ.க.), அசாமில் இருந்து தெராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் (பா.ஜ.க.) மற்றும் பிரமோத் போரோ (UPP-L) ஆகியோரும் பதவியேற்றுள்ளனர்.
அதேபோல், சத்தீஸ்கரில் இருந்து லட்சுமி வர்மா (பா.ஜ.க.), பூலோ தேவி நேதம் (காங்கிரஸ்), அரியானாவில் இருந்து கரம்வீர் சிங் பவுத் (காங்கிரஸ்) மற்றும் சஞ்சய் பாட்டியா (பா.ஜ.க.) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வேம் நரேந்திர ரெட்டி தெலங்கானாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஜீத் குமார் ஒடிசாவிலிருந்தும், காங்கிரஸ் சார்பில் அனுராக் சர்மா இமாச்சலப் பிரதேசத்திலிருந்தும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.
