புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முக்கியமான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தை குறித்து பேசும்போது, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், சிலரால் அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் கூறினார்.
தென்னிந்தியாவில் தொகுதி மறுவரையறை தொடர்பாக சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புகின்றன என்றும், இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடிக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் காரணமின்றி பொய்யான தகவல்களை பரப்புகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.
பெண்கள் அரசியலில் முன்னேற வேண்டும் என்றால், மத்திய அரசு கொண்டு வரும் இந்த மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சமமான வாய்ப்பும் நியாயமான பிரதிநிதித்துவமும் வழங்கப்படும் என்பதால் எந்தவொரு கவலையும் தேவையில்லை என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
