புதுடெல்லி: டெல்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தாவுக்கு தொடர்ந்து குண்டுவெடிப்பு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், டெல்லி சட்டசபை வளாகத்தின் நுழைவாயில் வழியாக ஒருவர் அத்துமீறி நுழைந்து, அடையாளம் தெரியாத பொருளை சபாநாயகரின் வாகனத்தில் வைத்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், சட்டசபை செயலகம் மற்றும் சபாநாயகர் அலுவலகத்திற்கு 6 முதல் 7 வரை அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் மிரட்டல்களை முன்னிட்டு உடனடியாக பாதுகாப்பை உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, சபாநாயகர் விஜேந்தர் குப்தாவுக்கு புதிதாக Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு குழு ஒன்று 24 மணி நேரமும் அவருடன் இணைந்து செயல்படும். மேலும், அவரின் வாகனத்துடன் எப்போதும் பாதுகாப்பு வாகனம் ஒன்றும் தொடர்ந்து செல்லும்.
அவரின் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளிலும் மற்றும் பொதுவெளியில் தோன்றும் ஒவ்வொரு நேரத்திலும் இந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
