கொழும்பு,
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் இலங்கை பயணம் இது ஆகும்.
கொழும்பு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஒரு தமிழரான ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட இந்த பயணம், அரசியல் பார்வையைத் தாண்டி தமிழர்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பார்க்கப்படுகிறது. இந்திய–இலங்கை மீனவர் பிரச்சனை உள்ளிட்ட நீண்டநாள் சிக்கல்களுக்கு இந்த பயணம் தீர்வுக்கான வழி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் மூலம் பல முக்கிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன:
- இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு ‘ஓ.சி.ஐ’ அட்டை பெறுவதற்கான தகுதி நீட்டிக்கப்பட்டு, நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவுக்கு பயணம் சுலபமாகும்.
- இந்திய நிதியில் கட்டப்பட்ட வீடுகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் சமூக நிலையை உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- ‘திட்வா’ புயலுக்குப் பிறகு வடக்கு ரயில்வே சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, போக்குவரத்து மற்றும் சரக்கு சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
- கண்டி மற்றும் ஊவா மாகாணங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்று பெய்லி பாலங்கள் அமைக்கப்பட்டு, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
- தோட்டத் தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்விக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
- கிழக்கு மாகாணத்தில் பெண்கள் மேம்பாட்டிற்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன. மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள், கண் மற்றும் மனநல சிகிச்சை பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன.
- விவசாயத்திற்காக ஒப்பந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 3,300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற உள்ளனர். மேலும், ஆயுர்வேத கிராமம் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
- முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நான்கு மாடிகள் கொண்ட புதிய வார்டு வளாகம் கட்டப்பட உள்ளது.
- வனவிலங்கு பாதுகாப்பிற்காக இலங்கை ‘சர்வதேச புலிகள் கூட்டமைப்பில்’ இணைந்துள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தும் இந்தியா–இலங்கை நட்புறவை வலுப்படுத்துவதோடு, குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய தமிழர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயற்சிகளாக பார்க்கப்படுகின்றன.
