கோவை,
“தமிழகத்தில் மோசம் இல்லாத கிராமம் இல்லை. நாசம் பண்ணாத நகரம் இல்லை. திமுக தோற்க வேண்டும். தமிழகம் ஜெயிக்க வேண்டும்” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
கோவை கோல்டுவின்ஸ்சில் உள்ள மெர்லிஸ் ஓட்டலில் தே.ஜ. கூட்டணி வேட்பாளர்கள், பா.ஜ., அதிமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் கோவையை சேர்ந்த தொழில் அமைப்புகளும் பங்கேற்றன.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொகுதி மறுவரையறை மசோதாவையும், மகளிர் மசோதாவையும் திமுக மற்றும் காங்கிரஸ் தோற்கடித்ததால் தென் மாநிலங்களும் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பெரிய அநீதி என கூறினார்.
நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்திற்கு முன்பும் பின்பும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச அளவில் இந்தியா நல்ல பெயரை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
ஆந்திராவில் இரண்டு ஆண்டுகளில் கூகுள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் ரூ.15,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஐதராபாத்தில் 5,000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதையும், அமராவதியில் 2,500 ஏக்கரில் புதிய விமான நிலையம் உருவாக இருப்பதையும் குறிப்பிட்டார்.
விமான போக்குவரத்து வளர்ச்சி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் என பிரதமர் மோடி கருதுவதாகவும், ஆனால் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 500 ஏக்கர் நிலம் வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கோவில்கள் அதிகம் இருந்தும் கடவுள் எதிர்ப்பு நடக்கிறது என்றும், தகவல் தொழில்நுட்ப துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகம் முன்னேற வேண்டுமானால் இரட்டை இன்ஜின் ஆட்சி தேவை என்றும், அதற்கு தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்தால் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றும் கூறினார். மத்தியில் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்றும், தமிழகத்தில் ஜெயலலிதா பாணி ஆட்சி அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் அளித்த பேட்டியில், புதிய கட்சிகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும், தேர்தலுக்குப் பிறகே அவற்றின் நிலை தெரியும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இரண்டு முக்கிய கூட்டணிகள் மட்டுமே உள்ளன என்றும், கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் நிலையான ஆட்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இரட்டை இன்ஜின் அரசுகள் உள்ள இடங்களில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னேற்றம் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
சென்னை தனது பழைய பொலிவை இழந்துள்ளதாகவும், பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் மசோதா தொடர்பான முடிவுகள் தென் மாநில மக்களுக்கும் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்றும் கூறினார். 33% இடஒதுக்கீடு பல ஆண்டுகளாக கோரப்பட்ட நிலையில், அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியை திமுக தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டினார்.
1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டதை நினைவுபடுத்திய அவர், 2027ல் புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்தால் தென் மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.
வருமானம் ஈட்டாமல் இலவசங்களை வழங்க முடியாது என்றும், பொருளாதார வளர்ச்சி இல்லாமல் அரசு நீடிக்க முடியாது என்றும் கூறினார்.
ஆந்திராவில் ஆறுகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், தெலுங்கு கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கப்படுவதாகவும், காவிரி உள்ளிட்ட ஆறுகளுக்கும் நீர் வழங்கும் திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் நிர்வாகம் வெளிப்படையாக மாறும் என்றும், அப்போது ஊழல்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
