சென்னை,
பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து நடைபெறும் வெடிவிபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு மாற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததையும், பலர் காயமடைந்ததையும் தொடர்ந்து அவர் அறிக்கை வெளியிட்டார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரியது என குறிப்பிட்டார்.
பட்டாசு ஆலைகள், கடைகள் மற்றும் கிடங்குகளில் ஏற்படும் விபத்துகளில் மனித உயிர்கள் பலியாகும் நிலை வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாகவும், இது பெரும்பாலும் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விதிமீறல்களால் ஏற்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்ற வெடிவிபத்துகளில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்விபத்துகளால் பல குடும்பங்கள் வாழ்வாதார சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகள் கல்வியை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பட்டாசு தொழிலில் மட்டுமே சார்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கட்டனார்பட்டி விபத்துக்கான காரணங்களை கண்டறிய உடனடி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிசோதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
