உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல்களின் உதவியுடன் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
38 வயதான லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பை தொடரில் ஆறாவது முறையாக களமிறங்கிய நிலையில், அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.
போட்டியின் 6-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்தாலும், அது ஆஃப்சைடு காரணமாக நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9-வது நிமிடத்தில் அல்ஜீரியா அடித்த கோலும் ஆஃப்சைடாக அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 17-வது நிமிடத்தில் மெஸ்ஸி முதல் கோலை பதிவு செய்து அர்ஜென்டினாவை முன்னிலைக்கு கொண்டு சென்றார். அதன்பிறகு அல்ஜீரியா சமநிலை கோலுக்காக போராடிய போதிலும், முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் ஆட்டத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்த அர்ஜென்டினா அணிக்காக 60-வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது இரண்டாவது கோலை அடித்தார். தொடர்ந்து 76-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார்.
இறுதி நேரம் வரை அல்ஜீரியா கோல் அடிக்க முயன்றாலும், அர்ஜென்டினாவின் தடுப்பாட்டத்தை மீற முடியவில்லை. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
ஹாட்ரிக் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மற்றும் கால்பந்து பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
