புதுடெல்லி: 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடியை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா தற்போது உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அதிகளவில் இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதோடு, பல்வேறு நாடுகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆண்டுதோறும் புதிய சாதனைகளை எட்டிவருவதாக தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவின்படி, 2025-26 நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டில் பதிவான ரூ.1.54 லட்சம் கோடியை விட 15.6 சதவீத வளர்ச்சியாகும். மேலும், 2020-21 நிதியாண்டில் ரூ.84,643 கோடியாக இருந்த உற்பத்தியை ஒப்பிடுகையில் 110 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேபோல், 2013-14 நிதியாண்டில் ரூ.43,746 கோடியாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி தற்போது கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வளர்ச்சிக்கு பாதுகாப்புத் துறை நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளே காரணம் என்றும், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மேலும் வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
