சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கு வழங்க மறுக்கும் தி.மு.க. தலைமையினர் கூட்டாட்சி குறித்து பேசுவது முரண்பாடானது என்று காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் விமர்சித்துள்ளனர்.
இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்த பிறகும், அவர்களுக்கு அதிகாரப் பங்கீடு வழங்காத தி.மு.க. தற்போது கூட்டாட்சி குறித்து கருத்து தெரிவிப்பது ஆச்சரியமளிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி பொருந்தாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாக குறிப்பிட்ட அவர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்த அரசியல் தலைவரும் இதுபோன்ற கருத்தை தெரிவிக்க மாட்டார் என்றும் விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தி.மு.க.வினர் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும், முரசொலி உள்ளிட்ட தளங்களில் எல்லை மீறிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது காங்கிரசின் அரசியல் கடமை என்றும், அதனை காரணமாகக் கொண்டு காங்கிரஸ் தலைவர்களை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களின் ஆதரவு ஏன் குறைந்தது என்பதை தி.மு.க. முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி தொடர்ந்து விமர்சித்தால் எதிர்காலத்தில் அரசியல் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
