புதுடெல்லி: இந்திய எல்லைக்கு அருகில் உலகின் மிகப்பெரிய அணையை அமைக்கும் பணிகளை சீனா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திபெத்தில் அமைந்துள்ள யார்லங் சாங்போ நதியின் நீர்ப்பாசனப் பகுதியில், இந்திய எல்லையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணை அமைக்கப்படுகிறது. இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும், சீனா திட்டப் பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது.
யார்லங் சாங்போ நதி இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு சியாங் என்ற பெயரிலும், பின்னர் பிரம்மபுத்திரா நதியாகவும் பாய்கிறது. இந்த நதியின் நீர்வரத்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சீனா அமைக்கும் இந்த பிரமாண்ட அணை காரணமாக எதிர்காலத்தில் இந்தியாவுக்கான நீர்வரத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், குறிப்பாக விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் தாக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் காரணமாக, சீனாவின் கட்டுமானப் பணிகள் மற்றும் நதிநீர் மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
