சென்னை: நீட் தேர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் ஆகிய பாதுகாப்புப் படைகளின் இரு அடுக்கு பாதுகாப்புடன் இந்திய விமானப்படை மூலம் கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு அடுக்கு சிசிடிவி கண்காணிப்பு, பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரச் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், தேர்வு மையங்களில் நீண்ட நேர சோதனைகள், பல கட்ட உடல் பரிசோதனைகள் மற்றும் தேர்வு நேரம் 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பல மாதங்களாக தேர்வுக்காக தயாராகி வரும் மாணவர்களின் மனநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், நீட் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்வதில் மாணவர்கள் சிரமம் சந்தித்து வருவதாகவும், அந்தப் பிரச்னையை விரைவில் சரிசெய்வதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் தற்போதைய சிக்கல்களுக்கு தீர்வு அளிப்பதற்குப் பதிலாக புதிய பிரச்னைகளை உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் அண்ணாமலை தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளார்.
