மதுரை,
பெண்கள் அதிகாரம் பெறுவது காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று மத்திய தொழிலாளர் மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளின் அரசியல் அணுகுமுறை, மகளிர் அதிகாரமளிப்புக்கு எதிரானதாக உள்ளது. சில குடும்பங்களின் கட்டுப்பாட்டில் அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்று குற்றம்சாட்டினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த காலங்களில் முன்னேறாமல் தடுக்கப்பட்டதாகவும், பெண்கள் அரசியலில் அதிக பங்கு பெறுவதை இக்கட்சிகள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பெண்களுக்கு நிதி ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான பெண்கள் வங்கிக் கணக்குகள் தொடங்கி, பொருளாதார செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
பெண்களுக்கான கடன் வசதிகள் அதிகரித்துள்ளதையும், வேலைவாய்ப்பு இல்லாதோரின் விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தில் பெண்கள் மற்றும் பிற சமூகங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் அதிகரித்திருக்கும் வாய்ப்பு இருந்ததாகவும், அதை காங்கிரஸ் மற்றும் திமுக தடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பெண்கள் அரசியலில் முன்னேறினால் சிலரின் ஆதிக்கம் குறையும் என்ற அச்சமே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
இறுதியாக, இந்திய பெண்கள் முன்னேற்றத்தை எந்த அரசியல் தடைகளும் தடுக்க முடியாது என்றும், தங்களை தடுத்து நிறுத்துபவர்களுக்கு ஜனநாயக முறையில் பெண்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
