டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்பட்ட முறைகேடுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது, பேரணியை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவர்களும், போலீசாரும் காயமடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், குற்றப்பின்னணி இல்லாத மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைப்பாட்டையும் மத்திய அரசு முன்வைத்தது.
இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தங்களது வேதனையை பகிர்ந்துகொண்டனர்.
காயமடைந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மகள், தனது தந்தை சம்பவத்துக்கு முன்பே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருப்பதாக கூறியிருந்ததாக தெரிவித்தார். பின்னர், போராட்டத்தின் போது அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், ரத்தக்கறை படிந்த சீருடையுடன் வீட்டிற்கு திரும்பியதைப் பார்த்தது குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
மற்றொரு போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினரும், சமூக வலைதளங்களில் தவறான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டதாகவும், தங்கள் குடும்பத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தாக்குதலில் காயமடைந்த துணை உதவி கமிஷனரின் மனைவி, சம்பவத்தால் குடும்பம் பெரும் மனஉளைச்சலை சந்தித்ததாக கூறினார்.
காயமடைந்த உதவி எஸ்.ஐ.யின் மனைவி சீமா, “மாணவர்களின் பெயருக்கு களங்கம் விளைவித்த சமூக விரோதிகள் தப்பிக்கக் கூடாது. அதே நேரத்தில், உண்மையான மாணவர்கள் சரிபார்ப்புக்குப் பிறகு விடுவிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
