அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் மேஜர் ஜகத்குமார் படேல், நோயாளியின் மூளையில் இருந்த கட்டியை மூக்கு வழியாக எண்டோஸ்கோபி முறையில் வெற்றிகரமாக அகற்றி மருத்துவத் துறையில் கவனம் ஈர்த்துள்ளார்.
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த சார்ஜன்ட் ஆண்டி ஆர்ச்சர், கடந்த 15 ஆண்டுகளாக கடுமையான தலைவலி மற்றும் பார்வைக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனையில், அவரது மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி அருகே 4.4 செ.மீ. அளவிலான கட்டி பார்வை நரம்பை அழுத்தி வருவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வாஷிங்டன் அருகேயுள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையை மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணரான மேஜர் ஜகத்குமார் படேல் தலைமையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கர்னல் சார்லஸ் மில்லர் இணைந்து மேற்கொண்டனர்.
வழக்கமாக மண்டை ஓட்டை திறந்து செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு பதிலாக, எண்டோஸ்கோபி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு நோயாளியின் மூக்குத் துவாரங்கள் வழியாக கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
சிக்கலான இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு நாட்களிலேயே நோயாளி ஆண்டி ஆர்ச்சர் இயல்பு நிலைக்கு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் பாராட்டியுள்ளது.
