717 டாஸ்மாக் கடைகள் மூடல்; அரசின் உத்தரவை வரவேற்ற ஐகோர்ட்
மதுரை: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவில், “717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த கடைகளின் அருகே பார்கள் நடத்துவதற்கான குத்தகை உரிமம் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், “எங்களது குத்தகை காலம் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை உள்ளது. அதுவரை டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் கோரியிருந்தனர்.
அத்துடன், “தூரக் கட்டுப்பாடு தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யாமல் கடைகளை மூட உத்தரவிட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் மனுதாரர்கள் தெரிவித்தனர்.
மேலும், “கடை செயல்படாத காலத்திற்கான குத்தகை தொகையை திரும்ப வழங்க தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை செயலர், கமிஷனர் மற்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மனுவை நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், “டாஸ்மாக் கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவு தொடர்பானது. மது விற்பனை கடைகள் மூடப்பட்ட பிறகு, பார்களை எவ்வாறு செயல்படுத்த முடியும்?” என்று வாதிட்டார்.
இதற்கு நீதிபதி, “டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது” என கருத்து தெரிவித்தார்.
மேலும், மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும் என்றும், கடை செயல்படாத நாட்களுக்கான குத்தகை தொகையை திரும்ப வழங்குவது குறித்து அதிகாரிகள் தகுதி அடிப்படையில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
