முளைவிட்ட நெல்லை மூட்டைகளின் மீது வைத்து படம் எடுத்ததாக விளக்கம்
சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் முளைத்ததாக வெளியான புகைப்படம் தவறான முறையில் எடுக்கப்பட்டதாக தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மூன்றடைப்பு பகுதியில் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மூன்றடைப்பு-1 கொள்முதல் நிலையத்தில் இதுவரை 1,802 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 1,700 டன் நெல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 102 டன் நெல் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
அதேபோல், மூன்றடைப்பு-2 கொள்முதல் நிலையத்தில் 494 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 200 டன் நெல் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 294 டன் நெல் கையிருப்பில் உள்ளது.
மீதமுள்ள நெல்லை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரு கொள்முதல் நிலையங்களிலும் கடந்த 13ஆம் தேதியுடன் கொள்முதல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கையிருப்பில் உள்ள அனைத்து நெல் மூட்டைகளும் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், மழையில் நனையாத வகையில் தார்ப்பாய்கள் கொண்டு முறையாக மூடி பாதுகாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “வெளியான புகைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு தரையில் கிடந்த முளைத்த நெல்லை, நெல் மூட்டைகளின் மீது வைத்து எடுக்கப்பட்டதாகும். அது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயரதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில், நெல் மூட்டைகள் எதுவும் மழையில் நனைந்து சேதமடையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்த பருவகால உதவியாளர் நாகராஜபெருமாள் மற்றும் பருவகால காவலர் செல்லத்துரை ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“உண்மை நிலையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
