சென்னை,
ஏப்.23 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஏப்.21 மாலை 6 மணி முதல் எந்தவிதத்திலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126ஆம் பிரிவின்படி, ஏப்.21 மாலை 6 மணி முதல் ஓட்டுப்பதிவு முடியும் வரை பல கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எந்தவொரு தேர்தல் பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவற்றையும் நடத்தவோ, ஏற்பாடு செய்யவோ அல்லது பங்கேற்கவோ அனுமதி இல்லை.
மேலும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் மற்றும் மின்னணு ஊடகங்களிலும் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொதுமக்களை ஈர்க்கும் எந்த நிகழ்ச்சியையும் நடத்தி தேர்தல் பிரசாரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126(2)ன்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
மேலும், தொகுதிக்கு வெளியே இருந்து வந்துள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் ஏப்.21 மாலை 6 மணிக்குப் பிறகு அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என்பதும் கண்காணிக்கப்படும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் ஏப்.21 மாலை 6 மணிக்குப் பிறகு செல்லாது ஆகும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளரும், தேர்தல் முகவரும் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வர அல்லது அழைத்துச் செல்ல வாகனங்களை பயன்படுத்துவதற்கு வேட்பாளர்களுக்கு அனுமதி இல்லை. இது சட்ட விரோதமாக கருதப்படும்.
மேலும், வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திற்கு வெளியே மட்டுமே தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றும், தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
