கடம்பத்தூர்: திருவள்ளூர் வட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 40 கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் வட்டத்தில் உள்ள கூவம், மப்பேடு, நரசிங்கபுரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள இந்த 40 கோவில்களில், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்த்து மொத்தம் 75 பேர் பணியாற்றி வருகின்றனர். இக்கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அதேபோல், மின்கட்டணமும் செலுத்தப்படாத நிலையில் உள்ளது.
இந்த சூழலில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மின்கட்டணம் செலுத்தாததால், மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டிக்க வந்தனர். இதையடுத்து, கோவில் நிர்வாக ஊழியர்கள் அதிகாரிகளுடன் சமரச பேச்சு நடத்தியதால், அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இந்த சம்பவம், சோளீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்சவ திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பளம் வழங்கி, மின்கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறியதாவது: திருவள்ளூர் வட்டத்தில் உள்ள 40 கோவில்களில் பணியாற்றி வந்த செயல் அலுவலர் லதா பணியிடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை பார்த்தசாரதி கோவிலுக்கு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட சிந்துமதிக்கு வங்கி பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படாததால் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் புதிய செயல் அலுவலர் மூலம் சம்பளம் மற்றும் மின்கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
