புதுடில்லி: நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை நிலவுவதாக பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சில குறிப்பிட்ட பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படும் தகவல்கள் எந்த ஆதாரமும் இல்லாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது. இந்தியா பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்யும் நாடாக இருப்பதையும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகிய அனைத்திற்கும் போதுமான கையிருப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதில் நிறுவனம் உறுதியாக இருப்பதாகவும், பொதுமக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. அத்தியாவசியமின்றி எரிபொருளை சேமித்து வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
