புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களில் சராசரியாக தினமும் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ராஜ்யசபாவில் அளித்த பதிலில், 2021 முதல் 2025 வரை வெளிநாடுகளில் மொத்தம் 37,740 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
இதில் 86 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்தவர்கள். குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 12,380 பேரும், சவுதி அரேபியாவில் 11,757 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2021 முதல் 2025 வரை வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடமிருந்து 80,985 புகார்கள் இந்திய துாதரகங்களுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் அதிக புகார்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஓமன் மற்றும் சவுதி அரேபியா நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளன.
இந்த புகார்களில் முக்கியமாக, நேரத்திற்கு ஊதியம் வழங்காதது, பாஸ்போர்ட்டை கைப்பற்றி வைத்தல், கூடுதல் வேலை நேரத்திற்கு சம்பளம் வழங்காதது, விடுப்பு மறுப்பு மற்றும் தொழிலாளர் உரிமை மீறல்கள் போன்ற பிரச்னைகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், துாதரகங்கள் மற்றும் சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிற நாடுகளுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
