திருவனந்தபுரம்: “நம் நாட்டில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க, கடற்படை போதிய பாதுகாப்பு அளித்து வருகிறது” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கேரளாவில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய சூழலில் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், மேற்காசியாவில் நிலவும் போர் நிலையை மத்திய அரசு கவனமாக கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
எந்தவொரு அவசர சூழலையும் எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பிரதமர் நரேந்திர மோடி துாதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
மேற்காசிய போர் பதற்றத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்றும், இதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கிடையில், இஸ்ரேல் – ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளை முறியடிக்க இந்தியா நடவடிக்கை எடுக்கலாம் என அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு பதிலாகவே ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
