சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை, “பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார்” என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் பேசிய ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்த போது, அதன் பொருளுடன் தொடர்பில்லாத வகையில் செல்வப்பெருந்தகை பேசியதாக குற்றம்சாட்டினார்.
மேலும், அந்த நிகழ்வுக்குப் பிறகு, அவரை இனி கூட்டங்களில் கலந்து கொள்ள விட வேண்டாம் என உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ராகுலின் அடுத்த கூட்டத்திற்கு அழைப்பு கிடைக்கவில்லை என்ற நிலை வெளிப்படாமல் இருக்க, செல்வப்பெருந்தகை தனது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது என்றும், தன்னை வீட்டுக்குள் சிறைப்பிடித்துள்ளனர் என்றும் கூறியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆனால், வருமான வரித்துறை இதை மறுத்து, எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தன்னை வீட்டிற்குள் முடக்கியுள்ளனர் என கூறியவர் பின்னர் வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது, அவரது குற்றச்சாட்டு உண்மையல்ல என்பதற்கான சான்று எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், “பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார்” என்று அவர் விமர்சித்துள்ளார்.
அத்துடன், இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தது ஆச்சரியம் அளிப்பதாகவும், உண்மைகளை சரிபார்க்காமல் கருத்து தெரிவிப்பது தேர்தல் பயத்தை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
