திருநெல்வேலி,
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அவர் குற்றம்சாட்டினார். சட்டவிரோத கனிம வளம் தொடர்பாக பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சில குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு, அதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மாநில அரசின் பொறுப்பு உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
மத உரிமைகள் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். ஹிந்துக்கள் நம்பிக்கைகள் மதிக்கப்படவில்லை என்றும், வழிபாட்டு உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பாஜ ஆட்சி அமைந்தால், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்று அவர் உறுதி தெரிவித்தார்.
மேலும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தொடர்பாகவும் அவர் பேசி, காங்கிரஸ்–திமுக கூட்டணி அதை ஆதரிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
