புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு சபைகளிலும் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி நேற்று சமர்ப்பித்தது.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மத்தியில் ஆளும் பா.ஜ. அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தகுதியான பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன என்றும் இண்டி கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சூழலில் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மான நோட்டீசை லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இண்டி கூட்டணி சமர்ப்பித்துள்ளது.
லோக்சபாவில் இந்த நோட்டீசில் 130 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 63 எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கு டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் சில சுயேச்சை எம்.பி.க்களும் இந்த நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்திய வரலாற்றில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ் சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
ஆனால் பார்லிமென்டின் இரு சபைகளிலும் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த பதவி நீக்க தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்பது உறுதியாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அவருக்கு அரசியல் அழுத்தம் ஏற்படுத்தும் நோக்கில் இண்டி கூட்டணி இந்த நோட்டீசை சமர்ப்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
