ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் சீனா தொடர்ந்து சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், இந்திய எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்துள்ளது.
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசியபோது, 1963 முதல் இந்தியாவுக்குச் சொந்தமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் சீனா சட்டவிரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியா ஒருபோதும் சீனாவின் இறையாண்மையை மீறியதில்லை என்றும், ஆனால் சீனாவின் நடவடிக்கைகள் அதற்கு மாறாக இருப்பதாகவும் அவர் கூறினார். இறையாண்மை தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கான நியாயமான கவலைகளை வெளிப்படுத்தும் உரிமை இந்தியாவுக்கே இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவுக்குச் சொந்தமான ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் சீனா மேற்கொண்டு வரும் பல்வேறு கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் வெளியுறவுத் துறை குறிப்பிட்டுள்ளது.
1963-ஆம் ஆண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தத்தின் மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த இந்திய நிலப்பரப்பான சாக்ஸ்கம் பள்ளத்தாக்கின் சுமார் 5,180 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்டதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. அந்த ஒப்பந்தத்தை இந்தியா தொடக்கத்திலிருந்தே சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது என நிராகரித்து வருகிறது.
மேலும், சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட்’ முன்முயற்சியின் கீழ் செயல்படுத்தப்படும் சீன–பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை (CPEC) திட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்வதால், அதற்கும் இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக வெளியுறவுத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
