சென்னை: தமிழகத்தில் பெண்கள் அச்சுறுத்தப்படும் சூழல் நிலவுகிறது; பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி விட்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்.பி. கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆளும் தி.மு.க. அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பற்ற நிலை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்னையை ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை எழுப்பினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தினமும் நிர்பயா வழக்கை சந்திப்பது போன்ற சூழல் நிலவுகிறது. கடந்த 10 நாட்களில் மூன்று பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதால் பார்லிமென்ட் குழுவை அனுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் தூத்துக்குடி மாணவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விளாத்திகுளம் பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்த சென்ற தி.மு.க. துணை பொதுச்செயலரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியை மக்கள் சூழ்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதை சுட்டிக்காட்டிய அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, தூத்துக்குடி மாணவிக்கு உரிய நீதி கிடைக்க அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் 17ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
நிலைமை மாறவில்லை
இந்த சம்பவங்கள் தேர்தல் நேரத்தில் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தத் திட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
“சாந்தமாக இருந்தால் நதி சுத்தமாகிவிடுமா? நல்லவர்கள் கோபப்படாமல் இருப்பதால்தான் இத்தகைய சமூக இழிவுகள் தொடர்கின்றன.
இந்த கருத்தை 32 ஆண்டுகளுக்கு முன்பு மகாநதி திரைப்படத்தில் கூறியிருந்தேன்.
இன்றும் அந்த நிலைமை மாறவில்லை; அந்த கோபம் என்னுள் இன்னும் தீரவில்லை.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயம் எனக் கருத முடியாது.
அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை; எந்தப் பேச்சுக்கும் பொருள் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாநதி திரைப்பட வசனத்தை குறிப்பிட்டு கமல்ஹாசன் வெளியிட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
தேர்தல் நேரம்
கமல்ஹாசனின் பதிவு நியாயமான கோபத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், அது தி.மு.க.க்கு எதிரான விமர்சனங்களை அதிகரிக்கும் வகையில் உள்ளது என அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாணவி வழக்கை முன்வைத்து தி.மு.க. அரசை எதிர்க்கட்சிகள் தாக்கி வரும் நிலையில் கமலின் இந்த பதிவு கூடுதல் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சி தலைவர் என்பதால் அவருக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
