புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் போன்ற எதிர்பாராத உலகளாவிய நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிலைத்தன்மை நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
லோக்சபாவில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான துணை மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை அறிவித்தார்.
அவர் பேசும் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கூச்சல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். சிலர் சபையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.
கூடுதல் செலவினம்
கடும் அமளிக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மேற்காசிய மோதல்கள் போன்ற எதிர்பாராத உலகளாவிய நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி பொருளாதார நிலைத்தன்மை நிதி தொகுப்பு அறிவிக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதையும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதையும் இந்த நிதி உதவும்.
எதிர்பாராத நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து எதிர்கொள்ளும் வகையில் இந்த நிதி உருவாக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் கோடி ஆகும்.
இதில் நிகர ரொக்க செலவு ரூ.57,381.84 கோடி. மீதமுள்ள தொகை அரசின் சேமிப்பிலிருந்து வழங்கப்படும்.
இந்த கூடுதல் செலவினம் 2025-26 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.4 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும்.
பட்ஜெட் என்பது ஒரு ஆண்டுக்கான முன்கூட்டிய கணிப்பாகும். ஆனால் போர் அல்லது வினியோகத் தொடர் பாதிப்பு போன்ற எதிர்பாராத சூழல்கள் ஏற்பட்டால் அதனை சமாளிக்க தேவையான நிதியை உருவாக்குவது அவசியம்.
துணை மானிய கோரிக்கைகளை கொண்டு வருவது தவறான பட்ஜெட் திட்டமிடல் என எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதாரமற்றது.
அவசர சூழ்நிலைகளில் அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றனவா?
உலகம் நெருக்கடியை சந்திக்கும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி பாகுபாடு இன்றி அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டும். தவறான தகவல்களை பரப்பி பீதியை உருவாக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே ரூ.2.01 லட்சம் கோடி கூடுதல் செலவினங்களை கொண்ட துணை மானிய கோரிக்கைகள் குரல் ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
