சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், மும்பை – ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.
சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற 3டி அனிமேஷன் மற்றும் விஎஃப்எக்ஸ் (VFX) நீண்டகால திறன் மேம்பாட்டு பயிற்சி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தொழில்நுட்ப வளர்ச்சியால் கதை சொல்லும் முறையும், பொழுதுபோக்கு துறையும் வேகமாக மாறி வருவதாக குறிப்பிட்டார்.
உலகளவில் இந்திய கதைகளுக்கும், இந்திய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருவதாகவும், சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள நிபுணர்கள் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அனிமேஷன், விஎஃப்எக்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறைகளில் உலகளவில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகவும், புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நாடு முழுவதும் 15,000 பள்ளிகளிலும், 500 கல்லூரிகளிலும் AVGC தொடர்பான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப துறைகளில் இந்திய இளைஞர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருவதாகவும், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிவேக ரயில் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.
