தேசிய பாதுகாப்புக்கு டெலிகிராம் தகவல் பரிமாற்ற செயலி அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம், இணையக் குற்றங்கள், நிதி மோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு இந்த செயலி பயன்படுத்தப்படுவதாக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
நீட் மறுதேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாக டெலிகிராமில் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, அந்த செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணையின்போது மத்திய அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், டெலிகிராம் செயலி குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமல் செயல்பட உதவும் தளமாக மாறிவிட்டதாகவும், சட்டவிரோத சேனல்கள் மூலம் குழந்தைகள் தொடர்பான ஆபாச உள்ளடக்கங்கள் மற்றும் பதிப்புரிமை பெற்ற திரைப்படங்கள், இணையத் தொடர்கள் சட்டவிரோதமாக பகிரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குற்ற விசாரணைகளில் தேவையான தகவல்களை வழங்குவதில் டெலிகிராம் நிறுவனம் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது, ஒரு குறிப்பிட்ட தேர்வுக்காக கோடிக்கணக்கான பயனர்களின் உரிமையை கட்டுப்படுத்துவது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இரு தரப்பின் வாதங்களையும் பதிவு செய்த டெல்லி உயர்நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
