இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் புதுடெல்லியில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பில், இரு நாடுகளும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, அதனை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனுடன், இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பை மேம்படுத்துவது, சர்வதேச குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் பாதுகாப்பு துறையில் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா – அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதாகவும் இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
