பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து 12 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்தது தனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம் என தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியில் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், பிரான்சில் வாழும் இந்தியர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் வலுவான பாலமாக இருப்பதாக பாராட்டினார்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறிய பிரதமர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு ஆகியவை கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் மொபைல் போன் உற்பத்தியும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா இன்று உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
விண்வெளி, பசுமை எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறிய பிரதமர், ககன்யான் திட்டம், பசுமை ஹைட்ரஜன் முதலீடுகள் மற்றும் சோலார் திட்டங்கள் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்றார்.
உலக நாடுகள் தற்போது நம்பகமான கூட்டாளிகளை எதிர்பார்க்கும் சூழலில், இந்தியா ஒரு நம்பகமான பங்குதாரராக உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக உறவுகள் வலுவடைந்து வருவதாகவும், அடுத்த மாதம் இந்தியா – பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
