புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், அவர் சபையை வழிநடத்தி உரையாற்றினார்.
லோக்சபாவில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடைபெற்ற ஓட்டெடுப்பில் அது தோற்கடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று சபை கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா சபையை வழிநடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் இந்த சபையைவிட மேலானவர் என்றும், அவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றும் சிலர் நினைக்கின்றனர். ஆனால் அத்தகைய சலுகைகள் எதுவும் இங்கு இல்லை.
சபை அதற்கென வகுக்கப்பட்ட விதிகளின்படியே இயங்குகிறது. பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்களுக்குக் கூட சபையில் பேசுவதற்கு முன் விதிகளின் படி முன் அறிவிப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
நோட்டீஸ்
சபையில் மைக்ரோபோன்களை நான் கட்டுப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.
சபாநாயகர் இருக்கையில் மைக்ரோபோன்களை இயக்க அல்லது நிறுத்த எந்த சுவிட்சும் இல்லை.
சபைத் தலைவராக செயல்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதை நன்றாக அறிவார்கள்.
சபையில் பேச அனுமதி வழங்கப்பட்ட உறுப்பினரின் மைக்ரோபோன் மட்டுமே செயல்படுத்தப்படும்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மூன்றாவது முறையாக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது.
சபையில் உள்ள ஒவ்வொரு எம்.பி.யும் விதிகள் மற்றும் நடைமுறைகளின் கீழ் தங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியும் என்பதை உறுதி செய்ய நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.
என் அனைத்து நடவடிக்கைகளும் பாரபட்சமற்றவையாக உள்ளன.
லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது வேதனை அளித்தது. ஆனால் சபை விதிகள் மீறப்பட்டால் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
இதன் மூலம் சபையின் ஒழுக்கம் பேணப்படும். இது என் கடமையின் ஒரு பகுதியாகும்.
லோக்சபாவில் அரசியலமைப்பின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன்.
எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியபோதும் இதே நடைமுறையையே பின்பற்றியதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
