கொல்கட்டா: தமிழகத்தின் முன்னாள் கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் 22வது கவர்னராக நேற்று பதவியேற்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது.
இந்த மாநிலத்தில் கவர்னராக இருந்த அனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே அரசியல் மோதல் நிலவி வந்தது.
இந்த சூழலில் கடந்த 5ஆம் தேதி அனந்த போஸ் திடீரென கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் புதிய கவர்னராக தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து விடைபெற்ற அவர், மேற்கு வங்கத்தின் 22வது கவர்னராக நேற்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
கொல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கொல்கட்டா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால், ஆர்.என். ரவிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டசபை சபாநாயகர் பீமன் பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
