சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால் விலை உயர்வு இல்லை. எனவே வதந்திகளை பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம் என்று எண்ணெய் வினியோகஸ்தர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எண்ணெய் நிறுவனங்களிடம் போதிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
7,000 பெட்ரோல் பங்க்குகள்
இந்த தகவல்களுக்குப் பின்னரும் பலர் தங்கள் வாகனங்களில் டேங்குகளை முழுமையாக நிரப்பி வருகின்றனர். இதனால் பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் சுமார் 7,000 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.
ஒவ்வொரு பங்க்கிலும் தினமும் சராசரியாக 5,000 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகிறது.
ஈரான் தொடர்பான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் தடையின்றி நடைபெறுவதற்காக தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் விறகு மற்றும் மின் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதாக பரவிய வதந்தியை நம்பி வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்து வருகின்றனர்.
இதனால் பலர் தங்கள் வாகனங்களின் டேங்குகளை முழுமையாக நிரப்பி வருகின்றனர். இதனால் எரிபொருள் விரைவாக விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால் தட்டுப்பாடு பற்றிய தகவல்கள் தவறானவை என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக பெட்ரோலியம் டீலர்ஸ் அசோஷியேஷன் தலைவர் முரளி கூறியதாவது:
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய தகவலால் மக்கள் பங்க்குகளில் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் வாங்குகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 7,000 டீலர்களுக்கும் தேவையான அளவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்து வருகின்றன.
எந்தவித தட்டுப்பாடும் இல்லை.
எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ள ஒரே கட்டுப்பாடு என்னவெனில் கடனில் வழங்குவதற்கு பதிலாக உடனடியாக பணம் செலுத்த வேண்டும் என்பதே.
இதனால் விநியோகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லை.
ஒவ்வொரு டீலரும் மூன்று நாட்களுக்கு தேவையான இருப்பை வைத்திருப்பார்கள்.
பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்காது என்ற அச்சத்தால் பலர் கேன்களில் வாங்குகின்றனர். இது அபாயகரமானது.
ஜெனரேட்டர் பயன்படுத்துபவர்கள் தேவையான அளவு மட்டும் டீசல் வாங்கினால் போதும்.
100 லிட்டர், 500 லிட்டர் என அதிக அளவில் வாங்குவது தேவையற்றது. இதுவே செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறது.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எந்த பெட்ரோல் பங்க்கிற்குச் சென்றாலும் பெட்ரோல் கிடைக்கும். தமிழகத்தில் தேவையை விட அதிக எண்ணிக்கையில் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.
அதிகரிப்பு
பெட்ரோல் பங்க்கை தேடி மக்கள் அலைய வேண்டிய அவசியம் இல்லை.
வணிக காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் காஸ் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தட்டுப்பாடு வரும் என்று மக்கள் நினைத்து அதிகமாக வாங்குகின்றனர்.
இதன் காரணமாக வழக்கமான விற்பனையை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது.
மற்ற நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் நம் நாட்டில் விலை உயர்த்தப்படவில்லை.
அச்சம் காரணமாக பலர் வழக்கமாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புவதை விட 400 ரூபாய்க்கு நிரப்புகின்றனர்.
ஒவ்வொருவரும் தேவைக்கு அதிகமாக வாங்குவதால் இத்தகைய நிலை உருவாகிறது.
மத்திய அரசு 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 14 முனையங்களிலும் 21 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளது.
எண்ணெய் நிறுவனங்களும் இதை உறுதியாக தெரிவித்துள்ளன.
எனவே மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தேவையான அளவு எரிபொருளை தாராளமாக வாங்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
