சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பரவி வரும் தகவல்களுக்கு விளக்கம் அளித்த உள்துறை செயலர் தீரஜ் குமார், போதைப் பொருட்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு முக்கிய காரணமா இல்லையா என்பதை விவாதிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து உள்துறை செயலர் தீரஜ் குமார், பொறுப்பு டி.ஜி.பி. வெங்கடராமன், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
தீரஜ் குமார்:
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2021ஆம் ஆண்டில் 1,597 கொலைகள் நடைபெற்றன. 2024ஆம் ஆண்டில் அது 1,490 ஆகவும், 2025ஆம் ஆண்டில் 1,461 ஆகவும் குறைந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பொறுத்தவரை, 2021ஆம் ஆண்டில் 422 வழக்குகள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு அது 401 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சட்டம்-ஒழுங்கு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
காவல் மரணங்கள் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு இத்தகைய சம்பவங்களை சகித்துக்கொள்ளாது. அதனால்தான் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு போதைப் பொருட்கள் முக்கிய காரணமா இல்லையா என்பதை விவாதிக்க வேண்டாம்.
டி.ஜி.பி.க்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் பொறுப்பு டி.ஜி.பி.க்கும் வழங்கப்பட்டுள்ளன. இதையே சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு காரணம் என சிலர் கூறுவது தவறானது.
வெங்கடராமன்:
போக்சோ வழக்குகள் குறித்து பேசும்போது, அரசின் விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் புகார் அளிக்க முன்வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய புகார்கள் அதிகமாக வரவில்லை.
ஜாதி பெயரை குறிப்பிடினாலே எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி வெளியில் இருந்து வந்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் விரிவாக பேச முடியாது.
தென் மாவட்டங்களில் ஜாதி மோதல்கள், கொலை சம்பவங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஜாதி அடிப்படையில் வீடியோக்கள் வெளியிடுபவர்களை காவல்துறை கண்காணித்து வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்
