லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த அப்ரார் அஹமது என்ற வீரரை சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் நடைபெறும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா நடவடிக்கை எடுத்தது.
அதன் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சர்வதேச போட்டிகளின் போது பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்க கூட இந்திய வீரர்கள் மறுத்த சம்பவங்கள் நடந்தன. சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் இதே நிலை தொடர்ந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹமதை சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர்கள் வாங்கியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
‘தி ஹண்ரட்’
இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ரட்’ தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் பல சர்வதேச வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஏலத்தில் சன் குழுமத்திற்கு சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமதை ரூ.2.34 கோடிக்கு ஏலம் எடுத்தது.
பாகிஸ்தான் வீரர் ஒருவரை பிற அணிகளுடன் போட்டியிட்டு கோடிக்கணக்கில் வாங்கியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
