துடில்லி: ‘வாட்ஸாப்’, ‘டெலிகிராம்’ போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தி நடைபெறும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி ‘சிம் கார்டு’ இல்லாத மொபைல் போன்களில் இந்த செயலிகளை பயன்படுத்த முடியாது. மேலும் கணினியில் பயன்படுத்தும் இணைய பதிப்புகளில் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தானாக ‘லாக் அவுட்’ ஆகும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் சைபர் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் ‘டிஜிட்டல் கைது’ போன்ற ஆன்லைன் மோசடிகள் மூலம் மக்கள் ரூ.644 கோடி இழந்துள்ளனர்.
சவால்
இந்த வழக்குகளை விசாரித்தபோது ஒரு பொதுவான அம்சம் கண்டறியப்பட்டது. சைபர் குற்றவாளிகள் மொபைல் போன் மற்றும் இணையத்தில் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் ‘வாட்ஸாப்’, ‘டெலிகிராம்’, ‘சிக்னல்’ போன்ற செயலிகளை பதிவு செய்து பயன்படுத்துகின்றனர்.
அதன்பின் பதிவு செய்ய பயன்படுத்திய ‘சிம் கார்டை’ அகற்றி விடுகின்றனர். பலர் வெளிநாடுகளில் இருந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதால் அவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது.
இந்த நிலையில் ‘சிம் பைண்டிங்’ என்ற புதிய விதியை தொலைத்தொடர்பு துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விதியின் படி ‘வாட்ஸாப்’, ‘டெலிகிராம்’, ‘சிக்னல்’ போன்ற செயலிகள் எந்த சிம் எண்ணில் பதிவு செய்யப்பட்டதோ அதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மொபைல் போனிலிருந்து சிம் கார்டு அகற்றப்பட்டால், அந்த போனில் வைஃபை இணைய வசதி இருந்தாலும் இந்த செயலிகள் இயங்காது.
சிக்கல்
மேலும் இந்த செயலிகளின் இணைய பதிப்புகளில் ‘லாக் இன்’ செய்யப்பட்டிருந்தால் அவை ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தானாக ‘லாக் அவுட்’ ஆகும்.
அதன்பின் மீண்டும் பயன்படுத்த மொபைல் போனில் உள்ள செயலியில் இருந்து ‘க்யூ.ஆர். கோடு’ ஸ்கேன் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த விதிகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த ‘சிம் பைண்டிங்’ விதியால் வெளிநாடு செல்லும் இந்திய பயணிகள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அங்கு ‘ரோமிங் சிம்’ பயன்படுத்தும்போது வாட்ஸாப் அணுக முடியாத நிலை உருவாகிறது.
மேலும் இணைய பதிப்பு ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை ‘லாக் அவுட்’ ஆகுவதால் தொழில்நுட்ப ரீதியாக பணிகளில் பயன்படுத்துவோருக்கு சிரமம் ஏற்படுகிறது.
இதுகுறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகையில், இந்திய இணைய மற்றும் மொபைல் போன் சங்கம் மற்றும் பிராட்பேண்டு இந்தியா அமைப்புகளுடன் ஆலோசனை செய்யாமல் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனால் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் அரசுக்கு அறிக்கை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என்றும் அவர்கள் கூறினர்.
