காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி. Karti Chidambaram அலுவலகத்தில் இருந்து ரூ.13.40 லட்சம் பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள அலுவலகத்தில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அதிகாரி தர்மலிங்கம் தலைமையில் குழு சோதனை நடத்தியது. அப்போது அங்கிருந்த பணத்தை கைப்பற்றினர்.
இதற்கிடையில், அங்கு கூடியிருந்த சிலர் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு பணத்தை எண்ணுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதிகாரி பணப்பையை எடுத்த போது, திடீரென இருவர் அந்த பணத்தை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
அவர்களை துரத்த அதிகாரிகள் முயன்றபோது, அங்கிருந்த சிலர் அதிகாரிகள் பயன்படுத்திய காரின் சாவியைப் பறித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் மற்றும் ஏ.எஸ்.பி. ஆஷிஸ் புனியா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் நிர்வாகி பழனியப்பனிடம் விசாரணை மேற்கொண்டு, பணத்துடன் தப்பியவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
