எபோலா வைரஸ் பரவல் எதிரொலி; 3 நாடுகளுக்கு பயணம் தவிர்க்க மத்திய அரசு அறிவுரை
புதுடில்லி: எபோலா வைரஸ் பரவல் காரணமாக காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளான உகாண்டா, காங்கோ மற்றும் சூடான் உள்ளிட்ட பகுதிகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எபோலா தொற்று பரவலை உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், அந்த நாடுகளில் வசித்து வரும் அல்லது பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்தியர்கள், அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடும் பொது சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
