ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி; விரைவில் திருப்புமுனை: டிரம்ப்
வாஷிங்டன்: ஈரானுடனான அமெரிக்கா – இஸ்ரேல் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் விரைவில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நான் தற்போது வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருக்கிறேன். இங்கு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத், ஐக்கிய அரபு அமீரக தலைவர் முகமது பின் சயத் அல் நஹ்யான், கத்தார் அமீர் தமீம் பின் ஹமாத் அல் தானி, கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, அமைச்சர் அலி அல்-தவாடி, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீபா உள்ளிட்ட தலைவர்களுடன் ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தொலைபேசியில் ஆலோசனை நடத்தினோம்.
இதைத்தவிர, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் தனிப்பட்ட முறையில் தொலைபேசி உரையாடல் நடத்தினேன். அந்த பேச்சுவார்த்தையும் மிகவும் சிறப்பாக அமைந்தது.
ஈரானுடனான ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
ஈரானுடனான அமெரிக்கா – இஸ்ரேல் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் மிகப்பெரிய திருப்புமுனை விரைவில் ஏற்படக்கூடும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
