வேலியே பயிரை மேய்ந்தது.. வங்கியில் ரூ.8 கோடி திருடிய பாதுகாவலர் கைது
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பரோடா வங்கியில் இருந்து ரூ.8 கோடிக்கும் அதிகமான பணத்தை திருடி சொத்துகள் வாங்கிய பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆமதாபாத்தின் கலுப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் பரோடா வங்கியில், வாடிக்கையாளர்களின் நகை மற்றும் பணத்திற்கு பாதுகாப்பு பொறுப்பில் ஷஞ்சய் சர்மா பணியாற்றி வந்தார். அவருடன் இணை பாதுகாவலராக ஹர்ஷித் கடியார் பணியாற்றி வந்தார்.
இந்த வங்கிக் கிளை மூலம் ரிசர்வ் வங்கி சார்பில் மற்ற வங்கிகளுக்கு பணம் அனுப்பப்படும் நிலையில், அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 174 கட்டுகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.8 கோடியே 70 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஹர்ஷித் கடியார் வங்கியில் இருந்து பல பெட்டிகளை வெளியே எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இதுகுறித்து கேட்டபோது, பெட்டிகளில் குப்பை இருப்பதாகவும் அதை வெளியே கொட்டச் செல்வதாகவும் அவர் கூறியிருந்தார்.
சிசிடிவி பதிவுகள் 90 நாட்களில் அழிந்து விடும் என்று நினைத்து, மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் தொடர்ந்து பணியில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
90 நாட்கள் கடந்த பிறகு உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுத்த அவர், ஏப்ரல் 13ஆம் தேதி 5 நாள் மருத்துவ விடுப்பு கேட்டிருந்தார். ஏப்ரல் 20ஆம் தேதி மீண்டும் பணிக்கு வர வேண்டிய நிலையில் அவர் திரும்பவில்லை.
இதையடுத்து வங்கி மேலாளர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஹர்ஷித் கடியாரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
திருடிய பணத்தை பயன்படுத்தி ரூ.2 கோடி மதிப்பிலான பங்களா வாங்கியதுடன், ரூ.1.40 கோடி மதிப்பிலான வணிக வளாகம் மற்றும் சிறிய லாரியும் வாங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்திருந்தார்.
அவருடன் பணியாற்றிய வைஷாலி பென் என்பவருக்கு ரூ.28 லட்சம் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹர்ஷித் கடியார் தங்கியிருந்த இடத்தில் இருந்த காரில் இருந்து ரூ.2.20 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவரது மனைவி ரயில்வே போலீசில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த திருட்டில் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
