லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
போட்டியின் 7-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் எலிஜா ஜஸ்ட் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், 32-வது நிமிடத்தில் ராமின் ரெஸாயியன் அடித்த கோல் மூலம் 1-1 என சமநிலை பெற்றது. இதனால் முதல் பாதி சமனில் நிறைவடைந்தது.
இரண்டாவது பாதியில் மீண்டும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து, 55-வது நிமிடத்தில் எலிஜா ஜஸ்ட் தனது இரண்டாவது கோலை பதிவு செய்து அணியை 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.
ஆனால், 64-வது நிமிடத்தில் முகம்மது மொஹேபி கோல் அடித்து ஈரானை மீண்டும் சமன் செய்ய வைத்தார். அதன்பிறகு இரு அணிகளும் வெற்றிக்கான கோலை அடிக்க தீவிரமாக போராடினாலும், கூடுதல் கோல் எதுவும் பதிவாகாததால் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
